ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்று அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை 52 ‘லீக்’ ஆட்டம் முடிந்துவிட்டன. இன்னும் 4 ஆட்டம் எஞ்சியுள்ளன.
பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 3 அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இன்னும் ஒரே அணி தகுதி பெற வேண்டும்.
வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (10 புள்ளி), பீட்டர்சன் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் (4 புள்ளி) ஆகிய 2 அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.
வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (14 புள்ளி), ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (12 புள்ளி), டாரன்சேமி தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் (12 புள்ளி) ஆகிய 3 அணிகள் போட்டியில் உள்ளன. இதில் ஒரு அணி தகுதி பெறும்.
நாளையுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் சென்னை–பெங்களூர், கொல்கத்தா– ஐதராபாத் அணிகளும், நாளைய போட்டியில் பஞ்சாப்– டெல்லி, மும்பை– ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சென்னை– பெங்களூர் அணிகள் மோதும் (மாலை 4 மணி) ஆட்டத்தின் முடிவில் எந்த பாதிப்பும் இருக்காது. 2–வது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வெற்றி பெற வேண்டிய நிலை சென்னை அணிக்கு இருக்கிறது. ‘ஹாட்ரிக்’ தோல்வியை தழுவிய சென்னை அணி இதில் இருந்து மீளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத்– கொல்கத்தா இடையே இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது. இதில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஐதராபாத்துக்கு உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளை பெற்று ‘பிளேஆப்’ வாய்ப்பு பட்டியலில் இருக்க முடியும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
நாளை மாலை 4 மணிக்கு பஞ்சாப்– டெல்லி மோதும் ஆட்டத்தின் முடிவில் எந்த பாதிப்பும் இருக்காது. பஞ்சாப் தோற்றாலும் முதல் இடத்தில் தான் இருக்கும்.
நாளை இரவு 8 மணிக்கு ராஜஸ்தான்– மும்பை அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவு முக்கியத்துவம் பெற்றது. இதில் வெற்றி பெற்றால் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். தோல்வி அடைந்தால் அந்த அணியும் மும்பையும் 14 புள்ளியுடன் சமநிலை பெறும். அதே நேரத்தில் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியும் கொல்கத்தாவை வென்றால் 3 அணிகளும் சமபுள்ளியை பெறும். நிகர ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி நுழையும்.
தற்போதுள்ள நிலையில் ராஜஸ்தானே ரன்ரேட்டில் முன்னிலையில் இருக்கிறது.
Comments[ 0 ]
கருத்துரையிடுக